சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் துள்ளலாய் ஆடிய வர்வரா: துவண்டு வீழ்ந்த முகோவா
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் நேற்று, துள்ளலாய் ஆடிய வர்வரா கிரச்சேவா அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிரச்சேவா (25 வயது, 103வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை கரோலினா முகோவா (28 வயது, 14வது ரேங்க்) மோதினர்.
அப்போட்டியில் துள்ளலாய் ஆடிய வர்வரா கிரச்சேவா அதிக போராட்டமின்றி ஒரு மணி 21 நிமிடங்களில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டி (26 வயது, 61வது ரேங்க்), லாத்வியாவின் எலனோ ஆஸ்டபென்கோ(28 வயது, 30வது ரேங்க்) களம் கண்டனர்.
அதில் பிரான்செட்டி 1-6, 6-3, 6-4 என்ற செட்களில் போராடி வென்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. மற்றொரு போட்டியில் முன்னணி வீராங்கனையாக கோகோ காஃப்பை (அமெரிக்கா) எதிர்த்து விளையாட இருந்த டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா (உக்ரைன்) போட்டியில் இருந்து விலகினார். அதனால் காஃப் 4வது சுற்றுக்கு எளிதில் நுழைந்தார்.
* இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி தோல்வி
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று, இந்திய வீரரான யூகி பாம்ரி/மிக்கேல் வீனஸ் (ஆஸ்திரேலியா) இணை, திடீர் வாய்ப்பு பெற்ற பிரான்சிஸ்கோ கேப்ரல் (போர்ச்சுகல்)/லூகாஸ் மெய்ட்லர்(ஆஸ்திரியோ) இணையுடன் மோதியது. அதில் பிரான்சிஸ்கோ இணை 3-6, 7-6 (7-1), 10-4 என்ற செட்களில் வெற்றிப் பெற்றது.
* ஆடவர் பிரிவில் அல்காரஸ் அசத்தல்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22 வயது, 2வது ரேங்க்) ஒரு மணி 35 நிமிடங்களில் 6-4, 6-4 என நேர் செட்களில் செர்பியா வீரர் ஹமத் மெட்ஜேடோவிச்சை (22 வயது, 72வது ரேங்க்) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ரூபலேவ் (27 வயது, 11வது ரேங்க்), ஆஸ்திரேலியா வீரர் அலெக்சி பாபிரின் (26 வயது, 19வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் ரூபலேவ் 3மணி 39 நிமிடங்கள் கடுமையாக போராடி 6-7 (5-7), 7-6 (7-5), 7-5 என்ற செட்களில் பாபிரினை வென்றார்.