சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மார்கெடாவை டார்கெட் செய்து வென்ற சபலென்கா: 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் நேற்று, பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா (27), செக் வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோஸோவா (26) மோதினர்.
இப்போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட சபலென்கா முதல் செட்டை, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை எவ்வித சிரமமும் இன்றி, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா கைப்பற்றி போட்டியில் வென்றார். இதனால், 3வது சுற்றுப் போட்டிக்கு அவர் முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தான் நாட்டுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினா (26), மெக்சிகோ வீராங்கனை ரெனேடா ஸராஸுவா ரக்ஸ்டுஹில் (27) மோதினர். இப்போட்டியில் இருவரும் சமபலத்துடன் மோதியதால், முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். பின், வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை ரைபாகினா வசப்படுத்தினார். அதனால், 4-6, 6-0, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.