சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அறிமுக வீரர் அத்மேனுடன் அரை இறுதியில் சின்னர்
சின்சினாட்டி: அமெரிக்காவின் ஒஹியோ அரசில் உள்ள சின்சினாட்டியில் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர் (23 வயது, 1வது ரேங்க்), கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்சிம் (25 வயது, 28வது ரேங்க்) மோதினர். ஒரு மணி 11 நிமிடம் நடந்த அந்த போட்டியில், சின்னர் 6-0, 6-2 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல் 2வது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் டெரென்ஸ் அத்மேன் (23 வயது, 136வது ரேங்க்), டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே (22 வயது, 9வது ரேங்க்) களமிறங்கினார். விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் முடிவில் அத்மேன் 6-2, 6-3 என நேர் செட்களில் முன்னணி வீரர் ரூனேவை சாய்த்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 13 நிமிடங்கள் நடந்தது.
தகுதிச் சுற்று மூலம் முதன்மை சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அத்ேமன் அடுத்தடுத்து முன்னணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஏடிபி சர்வதேச களத்தில் அறிமுகமாகி 8 மாதங்களில் ஏடிபி தரவரிசை போட்டி ஒன்றில் அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி இருக்கிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜானிக் சின்னரை, டெரென்ஸ் அத்மேன் எதிர்கொள்வார்.