சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் மல்லுக்கட்டு
சின்சினாட்டி: அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் - 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் மோதவுள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதியில் நேற்று, ஸ்பெயினை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22), ஜெர்மனியை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (28) மோதினர்.
போட்டியின் துவக்கம் முதல் அல்காரசின் கரமே ஓங்கி இருந்தது. முதல் செட் போட்டியில் அநாயாசமாக ஆடிய அல்காரஸ் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை மேலும் ஆக்ரோஷத்துடன் ஆடிய அல்காரஸ், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால் அற்புத வெற்றி பெற்ற அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), பிரான்சை சேர்ந்த அறிமுக வீரர் டெரென்ஸ் அத்மேன் (23) உடன் மோதினார்.
அனுபவமற்ற போதிலும் முதல் செட்டில் சின்னருக்கு ஈடுகொடுத்து ஆடினார் அத்மேன். இருப்பினும் அந்த செட்டை, 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் வசப்படுத்தினார். அடுத்து நடந்த 2வது செட்டை சுதாரித்து ஆடிய சின்னர், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் சின்னரும், அல்காரசும் களம் காணவுள்ளனர்.