சிட்கோவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியது
மதுக்கரை : முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியின்போது, குறிச்சி பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது, இங்கு செயல்பட்டு வரும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கோவையின் முக்கிய, தொழில்முனையமாக செயல்பட்டு வரும் இந்த சிட்கோ தொழிற்பேட்டையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பல கோடி செலவில் மேம்படுத்தியுள்ளது மட்டுமின்றி, இங்கு தங்க நகை தொழில்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ பகுதியில் எல்.ஐ.சி. காலனி முதல் சிட்கோ வரை சாக்கடை கால்வாய் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர், ரோட்டில் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், இங்கு சுகாதாரம் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீண்டநாள் பிரச்னைக்கு செய்தி வெளியிட்டு தீர்வுகண்ட தினகரன் நாளிதழுக்கு தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.