குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு: விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
எனவே, கடந்த 2009ம் ஆண்டு ரூ.14.75 கோடி செலவில் 4 சக்கர வாகனம் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து திட்டமிட்டு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், பணிகளை உடனே முடிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய துறையினர், தொலை தொடர்பு துறையினர், ரயில்வே துறை அதிகாரிகள் சுரங்கப்பாதை பணிகள் நடக்கும் இடத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஆய்வு செய்து, பின்னர் மின்சார கேபிள், தொலைத்தொடர்பு கேபிள்கள் அப்புறப்படுத்தி மாற்று இடம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து 75 சதவீத பணிகள் முடிவடைந்தது. எனவே, விரைந்து சுரங்கப்பாதை பணிகளை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மறைமலை நகர் பகுதியில் நேற்று மாலை நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை துணைச் செயலாளர் பிரதாப் முருகன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஜவகர் முத்துராஜ், மண்டலக்குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் உடன் இருந்தனர். சுரங்கப்பாதையை இரண்டு வழி பாதையாக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரயில்வே கேபிள் மாற்றியமைக்கும் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடித்துவிடுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.