சித்தூர் அடுத்த சோமலா மண்டலத்தில் ஆய்வு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்
*பழங்குடியினருக்கு கலெக்டர் அறிவுரை
சித்தூர் : சித்தூர் மாவட்டம், சோமலா மண்டலம், இரிகிபெண்டா கிராமத்தில் நேற்று கலெக்டர் சுமித்குமார் திடீரென அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சோமலா மண்டலத்தில் உள்ள பயலகுட்டா, குவ்வலகுட்டா, இரிகிபெண்டா மற்றும் சென்னபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களிடம் இருந்து குறைகள் கேட்டறியப்பட்டு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
கல்வி மூலம் வேலைவாய்ப்பு பெற பழங்குடியின பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பயலகுட்டாவில் உள்ள மக்களின் பிரச்னைகள் குறித்து விசாரித்தபோது, சாலை சேதமடைந்துள்ளது என கூறினர்.
மேலும் சாலைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரினர். அதேபோல் அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறுகோரிக்கை விடுத்தனர்.பின்னர், பயலகுட்டா கிராமத்தில் பாழடைந்த வீடுகளை சீரமைக்க தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. கிராமத்தில் ஒருவருக்கு கூட வங்கிக் கணக்கு இல்லை.
கிராம மக்கள் வங்கிக் கணக்கை ஏற்படுத்திக் கொண்டால், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது டிபிஓ சுதாகர், தாசில்தார் மதுசூதன், எம்பிடிஓ பிரசாத், நீர்பாசனத்துறை அதிகாரி ஜான்சி, இரிக்கிபெண்டா சர்பஞ்ச் ரெட்டப்பா, ஏஎம்சி தலைவர் சீனிவாசலு நாயுடு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.