சித்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு 4 ஏக்கர் விவசாய நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு
*பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்த குடும்பத்தினர்
சித்தூர் : 4 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமிற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளிப்பார்கள். அதன்படி நேற்று கலெக்டர் சுமித்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நில ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும், சுடுகாடுக்கு வழி, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 347 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு பெத்த பஞ்சானி மண்டலம், பொட்ட காலனியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மனு அளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தனர். இதனை கண்ட முதலாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஷ்வர் விரைந்து சென்று பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு சொந்தமாக நான்கரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நாங்கள் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த இருவர், எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து கொண்டனர். மேலும். இது தங்களது சொந்தமான நிலம் என கூறி தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 6 வருடங்களாக வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை முறையாக ஆய்வு செய்து நிலத்தை மீட்டு, இருவர் மீது கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மனுநீதினால் முகாமில் இணை கலெக்டர் வித்யாதாரி, டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட ஏராளமான மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.