சின்னமனூரில் மாடு கட்டி, ஏரு பூட்டி பாரம்பரிய முறையில் பரம்படிக்கும் விவசாயிகள்
பெரியாறு அணையில் இருந்து, வழக்கம்போல் கடந்த ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வரை தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக சுமார் 14,700 ஏக்கர் பரப்பில் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில், தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முல்லைப் பெரியாறு பாசன நீரைப் பயன்படுத்தி வருடம் இருபோகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும், பாசன வசதி கிடைத்துள்ளதாலும், இதமான காலநிலை நிலவுவதாலும் சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
சின்னமனூர் பகுதியில் முதற்கட்டமாக மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2ம் கட்டமாக சின்னமனூர், முத்துலாபுரம் பரவு, பெருமாள் கோயில் பரவு, பிள்ளைக்குழிமேடு பரவு, வேம்படிகளம் பரவு, துர்க்கை அம்மன் கோயில் பரவு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மண்ணிற்கு உரமிட்டு டிராக்டர் மூலம் சேற்றுழவு செய்யும் பணிகளும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சில பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் இரட்டை மாடுகளை கட்டி, ஏர் பூட்டி பரம்படிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை டிராக்டர் மூலம் மட்டுமே உழவு செய்து பழக்கப்பட்டவர்களுக்கு ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வருகை, வேலைப் பளு, வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது என பல்வேறு காரணங்களினால் டிராக்டர் மூலம் உழவு செய்வதும், நெல் நாற்றுக்களை இயந்திரம் மூலமாக நடவு செய்வதும், அறுவடை செய்வதும் வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டது.
இந்த நிலையில், மண்ணில் தண்ணீர் தேக்கி இளகச் செய்து, உரமிட்டு மாடுகட்டி ஏர் பூட்டி வயலை உழும் பாரம்பரிய முறையை விவசாயிகள் மேற்கொண்டு வருவது மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு திரும்புவதில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தொடர்ச்சியான பாசன வசதி கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள் பாரம்பரிய முறைகளை தொடரும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.