நவ.1 முதல் அமல்; சீனாவுக்கு கூடுதலாக 100% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: நவம்பர் 1 அல்லது அதற்கு முன்பாக, சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: சீனாவில் பல விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. உலகின் அனைத்து நாடுகளுக்கும் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதில், அரிய மண் தாதுக்களைக் கொண்ட சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்படாத பொருட்கள்மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில், நாங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை, சீன பொருட்கள் மீதான வரிகளை நவ.1 அல்லது அதற்கு முன்பாக 100 சதவீதமாக அதிகரிப்பதுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் சீனா மீதான வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
என்னென்ன பாதிப்பு ஏற்படும்?
சீனா விதித்த அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதி தடையால் மின்னணுவியல், கணினி சில்லுகள், லேசர்கள், ஜெட் என்ஜின்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் மற்றும் காந்தங்களுக்கான அனைத்து தேவைகளும் முடக்கப்படும். இதன் மூலம் உலகம் முழுவதும் நவீன மின்னணு பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் தான் சீனா உலகை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.