சீனாவுக்கு ரகசியங்களை விற்க முயற்சி; இந்திய வம்சாவளி அமெரிக்க ஆலோசகர் கைது: ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் பறிமுதல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அதிகாரிகளை சந்தித்ததாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கொள்கை ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவரும், அமெரிக்காவின் முக்கிய கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே ஜே. டெல்லிஸ் (64), அமெரிக்க அரசின் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசாங்க அதிகாரிகளை சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
டெல்லிஸ், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஊழியராகவும், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வர்ஜீனியா வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ‘உயர் ரகசியம்’ மற்றும் ‘ரகசியம்’ எனக் குறிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட வகைப்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த நடவடிக்கைகள், நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது’ என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.