7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றார்: பிரதமர் மோடி-அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு; அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் இந்தியா-சீனா இடையே மீண்டும் நெருக்கம்
தியான்ஜின்: ஜப்பான் பயணத்தை தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனா சென்றடைந்தார். அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றிருப்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மாநாட்டின் இடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்தித்து பேச உள்ளார். எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
எஸ்சிஓ வருடாந்திர உச்சி மாநாடு சீனாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்தது. அப்போது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றார். அதன் பிறகு இந்த ஆண்டு மீண்டும் சீனாவின் தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்க உள்ளது. உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள நிலையில், முக்கிய நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா ஒரே இடத்தில் ஒன்று கூடும் இந்த மாநாடு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்பாக டெல்லியில் இருந்து ஜப்பானுக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நேற்று புறப்பட்டு சீனாவின் தியான்ஜின் நகரை வந்தடைந்தார்.
விமானநிலையத்தில் சீன கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளிகள் வரவேற்பு அளித்தனர். இந்திய வம்சாவளியினரின் பரதநாட்டியம், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டுகளித்தார். சீனாவில் தரையிறங்கியதும் பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில், ‘‘சீனாவின் தியான்ஜினில் தரையிறங்கினேன். எஸ்சிஓ உச்சி மாநாட்டில் கலந்துரையாடல்களையும், பல்வேறு உலக தலைவர்களை சந்திப்பதையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’’ என்றார்.
முன்னதாக சீனா புறப்படும் முன்பாக பேட்டி அளித்த பிரதமர் மோடி, உலக பொருளாதாரத்தின் நிலையற்ற சூழலில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம் என்றார். இது சீன பயணத்திற்கு பிரதமர் மோடி தரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. கடந்த 2020ம் ஆண்டு கல்வான் மோதலைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியா, சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதே சமயம் பேச்சுவார்த்தைகள் மூலம் இரு தரப்பு உறவை சீர் செய்வதற்காக நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து வந்த நிலையில், அமெரிக்காவின் வர்த்தக போருக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் மீண்டும் நட்பை புதுப்பிக்கத் தொடங்கி உள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இதில் இரு தலைவர்களும் இந்தியா-சீனா பொருளாதார உறவுகளை மதிப்பாய்வு செய்வார்கள் என்றும், கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடியில் சிக்கிய உறவுகளை மேலும் இயல்பாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர, எஸ்சிஓ மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்து பேச உள்ளார். மேலும் பல உலக தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். எனவே எஸ்சிஓ மாநாடு உலக அரங்கில் பல்வேறு எதிர்பார்ப்பகளை எதிர்படுத்தி உள்ளது.
* உக்ரைன் அதிபருடன் போனில் பேசிய மோடி
எஸ்சிஓ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ள நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி, அதற்கான அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் நம்புவதாக ஜெலென்ஸ்கி கூறிய சில நாட்களுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
* ஜப்பான் செமிகண்டக்டர் ஆலையை பார்வையிட்டார்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், இந்தியா-ஜப்பான் 15வது உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதில் 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரதமர்கள் மோடியும், இஷிபாவும் டோக்கியோவில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சென்டாய் நகருக்கு புல்லட் ரயிலில் பயணித்தனர். சென்டாயில் பிரதமர் இஷிபா, மோடிக்கு மதிய விருந்து அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் டெல் மியாகி செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு சென்று பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில், ஜப்பானின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல் மியாகியின் பங்கு குறித்து பிரதமர் மோடியின் அதிகாரிகள் விளக்கினர். மியாகி நிறுவனம் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.