சீனா, பாக்.,செய்கின்றன அணு ஆயுத சோதனையை நியாயப்படுத்தும் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: பாகிஸ்தான், சீனா உள்ளிட்டவை அணு ஆயுதங்களை சோதனை செய்கின்றன. அமெரிக்காவும் தனது சொந்த அணு ஆயுதங்களை சோதனை செய்யும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். முன்னதாக அதிபர் டிரம்ப் கூறுகையில், போட்டி சக்திகளுடன் சம அடிப்படையில் இருக்கும் வகையில் அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையை தொடங்கும் என்று அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில் அதிபர் டொனால்ட் டிரம்ப், \\”ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுத சோதனை செய்யும் நாடுகள். ரஷ்யா அணு ஆயுத சோதனையை செய்கிறது. சீனா சோதனை செய்கிறது. ஆனால் அவர்கள் அதனைப்பற்றி பேசுவதில்லை. அவர்கள் எங்கு சோதனை செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர்கள் நிலத்தடியில் சோதனை செய்கிறார்கள். அங்கு சோதனையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு சரியாக தெரியாது. உங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒரு திறந்த சமூகம். நாங்கள் வித்தியாசமானவர்கள். நாங்கள் அதனைப்பற்றி பேசுகிறோம். நாங்களும் அணு ஆயுதங்களை சோதிக்கப் போகிறோம். ஆயுதங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக சோதனை அவசியமாகும்” என்றார்.