சீனா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் போராடிய லெய்லாவை போல்டாக வீழ்த்திய காஃப்
பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்காவை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (21), கனடா வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் (23) உடன் மோதினார். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் காஃப் கைப்பற்றினார். அதன் பின் சுதாரித்து ஆடிய லெய்லா, அடுத்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் இருவரும் சளைக்காமல் போராடினர். இறுதியில் அந்த செட்டை, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி, 2-1 என்ற செட் கணக்கில் காஃப் போட்டியில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மன் வீராங்கனை இவா லிஸ் (23), உலகின் 10ம் நிலை வீராங்கனை எலெனா ரைபாகினா உடன் மோதினார். முதல் செட்டை, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் இவாவும், 2வது செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் ரைபாகினாவும் வசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த 3வது செட்டை, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய இவா லிஸ், 2-1 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.