சீனா ஓபன் டென்னிஸ் அசத்தலாய் வென்று அமண்டா சாம்பியன்
பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சீனாவின் பெய்ஜிங் நகரில் சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டிகளில், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா (24), செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா (20), வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அமண்டா, லிண்டா மோதினர். முதல் போட்டியில் அசத்தலாய் ஆடிய அமண்டா ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல், 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். பின், 2வது செட்டில் சுதாரித்து ஆடிய லிண்டா, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பழிவாங்கினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் போட்டி நடந்தது. அதில் உத்வேகத்துடன் ஆடிய அமண்டா, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.