சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் சிந்துவின் காலை வாரிய ஆன் செ யங்
ஷென்ஜென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை ஆன் செ யங்கிடம், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள், சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கொரியாவை சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை ஆன் செ யங் உடன் மோதினார். முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் யங் அநாயாசமாக கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது 21-13 என்ற புள்ளிக் கணக்கில் யங் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற யங், அரை இறுதிக்கு முன்னேறினார். கொரிய வீராங்கனை யங்கிற்கு எதிராக 8வது முறையாக சிந்து நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியுள்ளார். ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை, சீனாவின் ரென் ஜியாங் யு, ஸி ஹோனான் இணையுடன் மோதினர். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய இணை, 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வென்று, அரை இறுதிக்குள் நுழைந்தனர்.