சீனாவில் ஆசிய கோப்பை இந்திய பெண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு
பெங்களூர்: பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப்போட்டி செப்.5 முதல் செப்.14 வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடக்கிறது. இதில் இந்திய பெண்கள் அணி உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி உள்ள, பி பிரிவில் தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுடன் முறையே செப். 5, 6, 8 தேதிகளில் இந்திய அணி மோதுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் விளையாட உள்ள பெண்கள் அணியை ‘ஹாக்கி இந்தியா’ நேற்று அறிவித்தது. சலிமா டெட் தலைமையிலான இந்திய அணியில் கோல்கீப்பர்கள் பிச்சு தேவி, பன்சாரி சோலங்கி ஆகியோருடன் லால்ரெம் சியாமி, ஷர்மிளா தேவி, மும்தாஜ் கான், ஜோதி, தீபிகா உட்பட 20 பேர் இடம ்பெற்றுள்ளனர். இந்நிலையில் அணித் தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங், ‘சரியான அணியை ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்தது குறித்து மகிழ்ச்சி.
அனுபவம், அறிமுகம் என சம எண்ணிக்கையில் வீராங்கனைகள் அணியில் இடம் பிடித்துள்ளனர். கோப்பையை வெல்லும் இலக்கில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறோம்’ என்றார். இதற்கிடையில் இம்மாதம் 29ம் தேதி பீகாரில் தொடங்க உள்ள ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிகளில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் 18வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர் செல்வம் கார்த்தி மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.