சில்லிபாயிண்ட்...
* தெ.ஆ.வுக்கு எதிராக இங்கி. இமாலய வெற்றி
சவுதாம்ப்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, நேற்று, 3வது ஒரு நாள் போட்டியில் மோதியது. அப்போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 5 விக்கெட் இழப்புக்கு 414 ரன் குவித்தது. ஜோ ரூட் 100, ஜேகப் பெதெல் 110 ரன் விளாசினர். பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா, 20.5 ஓவரில், 72 ரன்னுக்கு சுருண்டது. அதனால், இங்கிலாந்து 342 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட் சாய்த்தார்.
* நவாஸ் ஹாட்ரிக் விக்கெட் ஆப்கனை வீழ்த்திய பாக்.
ஷார்ஜா: முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான், 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. பின், 142 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கன், 15.5 ஓவர் மட்டுமே எதிர்கொண்டு 66 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், பாகிஸ்தான், 75 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தம் 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட பாக். வீரர் முகம்மது நவாஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* ஸ்பெயின் கோல் மழை உருகி கரைந்த துருக்கி
கோன்யா: துருக்கியின் கோன்யாவில் நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் துருக்கி, ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் ஆடி கோல் மழை பொழிந்தனர். ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் மிக்கெல் மெரினோ ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். போட்டியின் முடிவில், ஸ்பெயின் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. போட்டியை நடத்திய துருக்கி அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியாததால், அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.