சில்லிபாயிண்ட்...
* சச்சின் மகன் நிச்சயதார்த்தம்
கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டென்டுல்கர் மகன் அர்ஜூன்(25). கிரிக்கெட் வீரரான இவர், பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவரின் பேத்தி சானியா சந்தோக் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குடும்பத்தினர் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். செல்லப்பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்தை சானியா நடத்தி வருகிறார். இவரது குடும்பம் மும்பையில் உள்ள புகழ் பெற்ற இன்டர்காண்டினென்டல் ஓட்டல், பிரபலமான புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் நிறுவனம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
* தொடரை வெல்லுமா இந்தியா
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ பெண்கள் அணி 3ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திலும் வென்றால் ராதா யாதவ் தலைமையிலான இந்திய ஏ அணி தொடரை கைப்பற்றும்.
* லியாண்டர் தந்தை மரணம்
ஜெர்மனியில் 1972ம் ஆண்டு நடந்த மியூனிக் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்காக விளையாடியவர் டாக்டர் வெஸ் பயஸ்(80). நடுகள ஆட்டக்காரரான வெஸ் முதுமை தொடர்பான பிரச்னைகளால் நேற்று காலமானார். அவர் மனைவி ஜெனீபர், மகன் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் ஆகியோருடன் கொல்கத்தாவில் வசித்து வந்தார். இந்நிலையில் டாக்டர் பயஸ் மறைவுக்கு ஹாக்கி சங்கங்கள், முன்னாள் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் எனபல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோவாவில் 1945ம் ஆண்டு பிறந்த பயஸ் தொழில் முறை விளையாட்டு மருத்துவர். கூடவே கொல்கத்தா கிரிக்கெட், கால்பந்து சங்கங்களின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். கூடவே அகில இந்திய ரக்பி சங்கத்தின் தலைவராக செயலாற்றி இருக்கிறார்.
* ஷார்ட்ஸ் நீக்கம்
தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்நிலையில் ஆஸி ஒருநாள் அணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், லான்ஸ் மோரிஸ் ஆகியோர் நேற்று விடுவிக்கப்பட்டனர். சமீபத்தில் நடந்த டி20 ஆட்டத்தில் தெ.ஆ வீரர் காகிசா ரபாடா வீசிய பந்து மிட்செல்லின் ஹெல்மட்டில் பலமாக தாக்கியது. அதனால் ஏற்பட்ட மூளையதிர்ச்சி காரணமாக தான் மிட்செலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த மூவருக்கு பதிலாக ஆரோன் ஹார்டி, கூப்பர் கோனொலி, மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் சோர்க்கப்பட்டுள்ளனர்.
* தமிழ் இல்லா தலைவாஸ்
இம்மாதம் 29ம் தேதி உள்ள புரோ கபடி லீக் போட்டியின் 12 தொடர் தொடங்க உள்ளது. இதில் விளையாட உள்ள தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத், துணைக் கேப்டனாக அர்ஜூன் தேஷ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பலியான், துணை பயிற்சியாளராக சதீஷ்குமார் ஆகியோர் பொறுப்பு ஏற்றுள்ளனர். ‘எதிர்பார்க்கும் திறன், ஏலத்தில் எடுப்பதற்கான போதுமான கையிருப்பு இல்லாததால் தமிழக வீரர்களை இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியில் தேர்வு செய்ய முடியவில்லை’ என்று தலைவாஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் சுஷேன் வசிஷ்த் தெரிவித்தார்.
* டிபிஎல் ஹாக்கி லீக் ஒன்றிய கலால் வெற்றி
திருவள்ளூர் பிரிமியர் லீக்(டிபிஎல்) ஹாக்கி போட்டியின் 3வது பதிப்பு சென்னை எழும்பூர் ஆக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது இதில் 4வது நாளான நேற்று முதல் ஆட்டத்தில் ஜிஎஸ்டி-ஒன்றிய கலால் அணிமாஸ்கோ மேஜிக் அணிகள் மோதின இதில் ஒன்றிய கலால் அணி 6-3 என்ற கோல் கணக்கில் மீண்டும் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். கூடவே அபிஷேக், பாலாஜி ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். மாஸ்கோ அணியின் சூரஜ், விக்னேஷ், அருள் அபியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஏஜிஓஆர்சி பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் களம் கண்டன. அதில் ஏஜிஓஆர்சி அணி 4 1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது அந்த அணியின் வீரத்தமிழன் 2 கோல் அடித்தார். கூடவே திசூல் கணபதி சிரண் மேடப்பா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பட்டாபிராம் தரப்பில் பழனிசாமி ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.
* டான்பாஸ்கோ, டிஈஎல்சி வெற்றி
சென்னை மண்டல பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் நடந்தது. மாணவர்கள் பிரிவில் டான்பாஸ்கோ மேனிலைப் பள்ளியும், மாணவிகள் பிிரிவில் டிஈஎல்சி மேகதலின் மேனிலைப்பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன. வெற்றிப் பெற்ற அணிகளுக்கு தெற்கு ரயில்வே உதவி பணி அலுவலர் சுனிதா உள்ளிட்டோர் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினர்.