சில்லிபாயிண்ட்...
* மாஸ்டர்ஸ் உலக நீச்சல் அரவிந்துக்கு வெண்கலம்
சென்னை: முன்னாள் மற்றும் மூத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கான உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த 7ம்தேதி தொடங்கியது. இதில் 30 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆண்கள் பிரிவில் பங்கேற்ற சென்னை வீரர் அரவிந்த் நைனார் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவு நீச்சலில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் அரவிந்த் நயினார் ஆவார்.
* சுஷில் குமாருக்கு ஜாமின் ரத்து
புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், கடந்த 2009 பெய்ஜிங் விளையாட்டில் வெண்கலமும், 2012 ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றவர். இவர், ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் தங்கரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 2021ல் கைதாகி, பின் ஜாமினில் விடப்பட்டார். இந்நிலையில், சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. ஒரு வாரத்தில் அவர் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* சுரேஷ் ரெய்னா ஆஜராக சம்மன்
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.