சில்லிபாயிண்ட்...
* மகளிர் பாக்சிங் கோச் சான்டியாகோ நியமனம்
புதுடெல்லி: இந்திய மகளிர் குத்துச்சண்டை தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய குத்துச் சண்டை முன்னாள் இயக்குனர் சான்டியாகோ நீவா நியமிக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினாவில் பிறந்த இவர், கடந்த 2017-22 ஆண்டுகளில் இந்திய ஆடவர் குத்துச் சண்டை அணிக்கு பயிற்சிகள் அளித்த அனுபவம் உள்ளவர். இக்காலக் கட்டத்தில் இந்திய அணி பல குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. இவரது நியமனம் குறித்து இந்திய குத்துச் சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் கூறுகையில், ‘இந்திய மகளிர் குத்துச் சண்டையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, நீவாவின் நியமனம் கருதப்படுகிறது’ என்றார்.
* சீன வீரரிடம் சுமித் தோல்வி
செங்டு: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக ஆசியா பசிபிக் டென்னிஸ் போட்டிகள் ஹாங்காங்கின் செங்டு நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், சீன வீரர் யுங்சவோகெடே பு உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து, வைல்ட் கார்ட் சிறப்பு நுழைவாக, ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடும் வாய்ப்பை சுமித் நாகல் இழந்துள்ளார்.
* ஆஷஸ் 2வது டெஸ்ட் கம்மின்ஸ் ஆடவில்லை
சிட்னி: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 4ம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டிக்கான ஆஸி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஸி அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், வரும் டிச. 17ம் தேதி துவங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்மின்ஸ் ஆடாததால், முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கி சிறப்பான வெற்றியை தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.