சில்லிபாயிண்ட்...
* ஜெய்ப்பூர் மியூசியத்தில் ஹர்மன்பிரித் சிலை
ஜெய்ப்பூர்: சமீபத்தில் முடிந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள ஷீஸ் மஹாலில் மெழுகால் சிலை செய்து வைக்கப்படும் என, ஜெய்ப்பூர் மெழுகு சிலை கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரித் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு, இங்கு ஏற்கனவே மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
* கிறிஸ்டியானோ ரொனால்டோ விரைவில் ஓய்வு
லண்டன்: போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தன் வாழ்நாளில் 952 கோல்கள் அடித்து சாதனை படைத்தவர். கால்பந்தாட்ட வரலாற்றில் மகத்தான பல அரிய சாதனைகளை அரங்கேற்றியவர். தற்போது, சவுதி அரேபியாவில் உள்ள அல் நஸர் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில், ‘விரைவில் ஓய்வு பெற உள்ளேன். ஓய்வு பெறுவது கடினமான ஒன்றுதான். இருப்பினும் அதற்கேற்ப என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என தெரிவித்தார். ரொனால்டோவின் சொத்து மதிப்பு ரூ.12,500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
* ஜூனியர்களை அடிக்கும் கேப்டன் சுல்தானா
டாக்கா: வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் நிகார் சுல்தானா ஜோடி, ஜூனியர் வீராங்கனைகளை அடித்து துன்புறுத்துவதாக, அந்த அணி வேகப்பந்து வீராங்கனை ஜஹானாரா ஆலம் குற்றம் சாட்டியுள்ளார். ஜஹானாரா, வங்கதேச அணிக்காக 52 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்துக்காக ஆடிய ஜஹானாரா, ‘வங்கதேச மகளிர் அணி கேப்டன் சுல்தானா இளம் வீராங்கனைகளை அடிப்பது வழக்கமான ஒன்றுதான்’ என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த குற்றச்சாட்டை வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மறுத்துள்ளது.