சில்லிபாயிண்ட்...
* பாக். முத்தரப்பு கிரிக்கெட் கை கொடுத்த ஜிம்பாப்வே
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் வரும் நவம்பர் 17 முதல் 29ம் தேதி வரை முத்தரப்பு டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் பாக். விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கனை சேர்ந்த 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியாகினர். அதையடுத்து, முத்தரப்பு போட்டிகளில் இருந்து ஆப்கன் வெளியேறியது. இந்நிலையில், ஆப்கனுக்கு பதில், ஜிம்பாப்வே அணி முத்தரப்பு போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* 400 மீ தடை தாண்டுதலில் தங்கம் வென்ற அர்ஜுன்
ஹனம்கொண்டா: தெலுங்கானாவின் ஹனம்கொண்டா நகரில் இந்தியன் ஓபன் யு23 தடகள போட்டிகள் நடந்து வந்தன. 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் கேரளாவை சேர்ந்த அர்ஜுன் பிரதீப் 50.29 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், 2022ல் நடந்த 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பி.யஷாஷ் 50.89 விநாடியில் போட்டி தூரத்தை கடந்ததே சாதனையாக நீடித்து வந்தது. அந்த சாதனையை தற்போது அர்ஜுன் தகர்த்துள்ளார். தடகளப் போட்டிகளில் ஒன்றான டெகாத்லான் போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த குஷல் குமார் 6905 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
* சும்மா விடக்கூடாது...ரஷித் கான் ஆவேசம்
காபூல்: பாக். தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, ஆப்கன் முன்னணி கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டித்தனமான செயல். இதுபோன்ற நியாயமற்ற, சட்டவிரோதமான நடவடிக்கைகள், அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். இதை சும்மா விடக்கூடாது. முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கன் விலகியதை வரவேற்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.