சில்லிபாயிண்ட்...
* மெஸ்ஸியால் மியாமிக்கு விழுந்த 41 கோல்கள்
ஃபோர்ட் லாடர்டேல்: மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நியூ இங்கிலாந்து ரெவல்யூஷன் அணிக்கு எதிராக ஆடிய, லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி, 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 3 கோல்கள் போட மெஸ்ஸி உதவினார். இதன் மூலம், மேஜர் லீக் கால்பந்து போட்டிகளில், நேரடியாகவோ, பிறர் போட உதவியோ, 41 கோல்களை பெற்றுத் தந்த 2வது வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன், 2019ல், லாஸ் ஏஞ்சலஸ் ஃபுட்பால் கிளப் அணிக்காக ஆடிய கார்லோஸ் வேலா 49 கோல்கள் போட உதவியாக இருந்துள்ளார்.
* ஆஸி வீரர் ஹென்றி மருத்துவமனையில் அட்மிட்
கான்பூர்: இந்தியா ஏ கிரிக்கெட் அணியுடன் ஆடிவரும் ஆஸ்திரேலியா ஏ அணியின் 4 வீரர்களுக்கு, கான்பூரில் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வயிற்று உபாதை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ஹென்றி தார்ன்டன் ரீஜன்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற 3 வீரர்கள் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து, ஆஸி அணி நிர்வாகமோ, மருத்துவமனை அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.