சில்லி பாய்ன்ட்...
* இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 11மணிக்கு கார்டிஃப் நகரில் ஆரம்பிக்கும். ஏற்கனவே இந்த 2 அணிகளுக்கு இடையே நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை தெ.ஆ 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
* ஆசிய கோப்பையில் செப்.14ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டம் குறித்து நேற்று பேசிய இந்திய கேப்டன் சூரியகுமார் செய்தியாளர்களிடம், ‘பாகிஸ்தானுக்கு எதிராக கோபத்துடன் ஆட ஏதுமில்லை. களத்தில் இறங்கும் போது ஆக்ரோஷம் எப்போதும் இருக்கும். அதே நேரத்தில் ஆக்ரோஷம் இல்லாமல் இந்த விளையாட்டை ஆட முடியும் என்று நான் நினைக்கவில்லை. களத்தில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று கூறினார். பாக் கேப்டன் சல்மான் ஆகா, ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்காக, எங்கள் வீரர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் ஏதும் தேவையில்லை’ என்று தெரிவித்தார்.
* உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஐரோப்பிய கண்டதுக்கான தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இத்தாலி-இஸ்ரேல் அணிகள் மோதின. ஹங்கேரியில் நடந்த இந்த ஆட்டத்தில் இத்தாலி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. கத்துக்குட்டி அணியான இஸ்ரேல் கணக்கில் உள்ள 4 கோல்களில் 2 கோல்கள் இத்தாலி வீரர்கள் மேனுவல், பஸ்தோனி ஆகியோர் போட்ட சுய கோல்களாகும்.
* மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகள் நடத்திய தேசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா உட்பட 8 நாடுகள் பங்கேற்றன. அதில் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-ஓம்ன் அணிகள் மோதின. அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அதனையடுத்து இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட தலா பெனால்டி ஷூட் அவுட் கோல் வாய்ப்பில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது. பைனலில் உஸ்பெகிஸ்தான் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
* சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கிப்போட்டியில் இன்று சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. பி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா லீக் சுற்றில் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த கொரியாவுடன் மோத உள்ளது.
* புரோ கபடி போட்டியின் முன்னாள் சாம்பியனான யு மும்பா நடப்புத் தொடரில் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய யு மும்பா கேப்டன் சுனில் குமார், ‘கேப்டனுக்கான பொறுப்புகளை எப்படி கையாளுவது என்பதை இப்போது பயிற்சியாளர்களாக இருக்கும் அனுப்குமார், அஜய்தாகூர் ஆகியோர் தலைமையின் கீழ் விளையாடிபோது நிறைய கற்றுக் கொண்டேன். எங்கள் பயிற்சியாளர் மன்பிரீத் சிங்தான் எனக்கு முதல் முறையாக கேப்டனாக பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கி தந்தார். இந்த 3பேரும் தான் எனது தவறுகளை எப்படி திருத்திக் கொள்வது, எப்படி அணியை வழிநடத்துவது உட்பட பல விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்’ என்று கூறினார். யு மும்பா இன்று இரவு நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
* சென்னை, மதுரை நகரங்களில் நவ.28 முதல் டிச.10ம் தேதி வரை ஆண்கள் இளையோர் ்உலக கோப்பை ்ஹாக்கிப்போட்டி நடைபெற உள்ளது. அதற்கான போட்டி அட்டவணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 24 அணிகள் களம் காணும் இந்தப்போட்டியில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து விளையாடும் லீக் ஆட்டங்கள் எல்லாம் சென்னையில் நடைபெறும். ராஜ்கிரில் நடந்த ஆண்கள் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக கோப்பையில் விளையாட வருமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
* கொரியாவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடகே அணி அரையிறுதியில் ஜப்பான் அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. எனினும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி இன்று கொரியா பெண்கள் அணியை எதிர்கொள்ள உள்ளது.
* ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் முதல் சுற்று ஆட்டங்களும் நடைபெற இருந்தன. பின்னர் முதல் சுற்று ஆட்டங்கள் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அதில் இந்தியாவின் லக்ஷயா சென், கிரண் ஜார்ஜ், எச்.எஸ்.பிரணாய், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, துருவ் கபிலா, தனிஷா கிறஸ்டோ ஆகியோர் களமிறங்க உள்ளனர்.