சில்லி பாய்ன்ட்...
* டிரம்ப் விருந்தில் ரொனால்டோ
நியூயார்க்: சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில், போர்ச்சுகலை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார். டிரம்ப்பும், இளவரசர் சல்மானும், இரு நாடுகளின் உயரதிகாரிகளிடம் பேசியபோது, ரொனால்டோ மிக அருகில் அமர வைக்கப்பட்டார். பின், தனது இளைய மகன் பாரனுக்கு ரொனால்டோவை அதிபர் டிரம்ப் அறிமுகம் செய்து வைத்தார். தன் மகன் ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்றும், ரொனால்டோவை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததால், தன்னை பாரன் அதிகமாக மதிப்பார் என்றும் டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
* இந்திய அணியுடன் கில் கவுகாத்திக்கு பயணம்
கவுகாத்தி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி, கவுகாத்தியில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு அவதிப்பட்டதால் பாதியில் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பூரண குணம் அடையாததால், 2வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், 2வது டெஸ்ட் பேட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் சுப்மன் கில்லும், கவுகாத்திக்கு செல்வார் என பிசிசிஐ கூறியுள்ளது.
* அதிவேக 6000 ரன் ஷாய் ஹோப் சாதனை
நேப்பியர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 247 ரன் எடுத்து, 74 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய ஷாய் ஹோப் 60 பந்துகளில் 109 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இது, ஷாய் ஹோப்பிற்கு 19வது சதம். இதன் மூலம், ஒரு நாள் போட்டிகளில் பிரையன் லாராவின் (285 இன்னிங்ஸ்கள்) 19 சத சாதனையை அவர் சமன் செய்தார். தவிர, 142 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அதிவேகமாக குவித்த 2வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ் 141 இன்னிங்ஸ்களில் 6000 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.