சில்லி பாய்ன்ட்...
* ஆஸி டி20 அணியில் ஹெட் விடுவிப்பு
ஹோபார்ட்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர், பெர்த் நகரில் வரும் 21ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கான சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடும் வகையில், ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வரும் நவ.10ல் துவங்கும் டாஸ்மேனியா அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆஸ்திரேலியா அணிக்காக டிராவிஸ் ஹெட் ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மற்றொரு ஆஸி வீரர் அலெக்ஸ் கேரியும் தென் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடவுள்ளார்.
* 101 வயதில் காலமான மாஜி ஒலிம்பிக் சாம்பியன்
லண்டன்: கடந்த 1948ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்சில், டிராக் சைக்ளிங் போட்டியில் அபாரமாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்ற வீரர் பிரான்சின் சார்லஸ் கோஸ்ட் (101). கடந்த 2024ல் நடந்த பாரிஸ் போட்டிகளின்போது போட்டிக்கான தீபம் ஏற்றிச் சென்ற கவுரவமும் அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக சார்லஸ் கோஸ்ட் காலமானதாக பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் மரினா பெராரி அறிவித்துள்ளார். கடந்த 1924ல் பிறந்த சார்லஸ், உலகின் மிக வயதான முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.