சில்லி பாய்ன்ட்....
* விராட் கோஹ்லி ஆர்சிபிக்கு குட்பை?
பெங்களூரு: ஐபில் நடப்பு சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, ஏற்கனவே டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியிலும் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு அணியின் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் ஒன்றை கோஹ்லி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், பெங்களூரு அணியில் இருந்து விராட் கோஹ்லி வெளியேறப் போவதாக குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் சூடான விவாதங்கள் நடந்து வந்தன. இந்த தகவல் வதந்தி என கூறப்பட்டபோதும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
* தகுதிச்சுற்றுகளில் 41 கோல் ரொனால்டோ உலக சாதனை
லிஸ்பன்: ஹங்கேரிக்கு எதிரான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), இரு கோல்கள் அடித்தார். அதன் மூலம், தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 41 கோல்கள் அடித்துள்ள அவர், இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், கவுதமாலா வீரர் கார்லோஸ் ரூயிஸ், கடந்த 1998-2016ம் ஆண்டுகளில் 39 கோல்கள் அடித்ததே, இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது ரொனால்டோ தகர்த்துள்ளார்.
* இந்தியாவுடன் முதல் ஓடிஐ ஜம்பா, ஹசல்வுட் விலகல்
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி, வரும் 19ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்திய அணியுடன் மோதும் ஆஸி அணியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸி அணியின் ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட் ஆகிய இருவரும் காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதையடுத்து, ஆஸி அணியில் ஜோஷ் பிலிப்ஸ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.