சில்லி பாய்ன்ட்...
* 14 வயது வைபவ் பீகார் துணை கேப்டன்
பாட்னா: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளன. இந்நிலையில், ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடும் பீகார் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி (14) நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக சகிபுல் கனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024-25 ரஞ்சி கோப்பை தொடரில் பிளேட் லீக் போட்டிகளில், பீகார் அணி 6 போட்டிகளில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்தாண்டில், பிளேட் லீக் போட்டிகளில் பீகார் தனது முதல் போட்டியில் அருணாசலப்பிரதேசம் அணியுடன் மோதுகிறது.
* டென்மார்க் பேட்மின்டன் இன்று துவக்கம்
ஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் போட்டிகள், டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் இன்று துவங்குகின்றன. இந்த போட்டிகளில், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை, ஆடவர் இரட்டையர் பிரிவில் மோதவுள்ளது. இந்த போட்டிகளில் 6ம் நிலை வீரர்களாக சாத்விக், சிராக் இணை பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்கள், தமது முதல் போட்டியில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லே, மாத்யூ கிரிம்லே இணையுடன் மோதவுள்ளனர்.
* ஒரு ஆண்டில் 1000 ரன் மந்தனா உலக சாதனை
புதுடெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 80 ரன் குவித்து சிறப்பான துவக்கத்தை தந்தார். இந்த ரன்களுடன் சேர்த்து, நடப்பாண்டில் மந்தனா, 18 ஒரு நாள் போட்டிகளில் ஆடி, 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 1000 ரன் கடந்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்கள் கடந்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையை மந்தனா இதன் மூலம் படைத்துள்ளார்.