சில்லி பாய்ன்ட்...
* போட்டி கட்டணத்தை நன்கொடை தந்த சூர்யகுமார்
புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனக்கு வழங்கப்படும் போட்டி கட்டணம் முழுவதையும், பஹல்காம் தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கும், ஆயுதப் படையினருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘ஆசிய கோப்பை போட்டியில் எனக்கு வழங்கப்படும் கட்டணம் முழுவதையும், ஆயுதப்படையினருக்கு ஆதரவு வழங்கும் வகையிலும், பஹல்காம் தாக்குதலில் பலியானார் குடும்பத்தினருக்கும் நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
* இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் ஓய்வு
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் (36), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். கிறிஸ் வோக்ஸ், கடந்த 2011ம் ஆண்டு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்காக ஆடினார். 62 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 192 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். சிறந்த ஆல் ரவுண்டரான அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி, ஒரு சதம் மற்றும் 7 அரை சதங்களை விளாசி உள்ளார்.