குழந்தைகள் நலனை காத்த நிறுவனங்களுக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு “குழந்தைகள் நலன் - சேவை விருதுகளை” முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தில், குழந்தைகளின் நலனை பேணிக் காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும், “குழந்தைகள் நலன் - சேவை விருதுகள்” அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய 4 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் 2025-26ம் நிதியாண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள்/அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும், 2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் - சேவை விருதுகளை” - அரசு குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தஞ்சாவூர், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லத்திற்கும், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என்ற பிரிவில் சென்னை, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கும் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு என்ற பிரிவில் ராமநாதபுரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கும் விருதுகளை வழங்கி, விருதுடன் பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி சிறப்பித்தார்.