சிறார் திரைப்பட மன்ற போட்டிக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சென்னை: நடப்பு கல்வியாண்டு சிறார் திரைப்பட மன்ற போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் மூலமாக பள்ளிகளில் மாதந்தோறும் சிறார் திரைப்பட மன்றம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான சிறார் திரைப்பட மன்ற பள்ளி அளவிலான போட்டிகள் 3 பிரிவுகளாக ஆகஸ்ட் 20 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் முறையாக எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சிறார் திரைப்படம் சார்ந்து ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான் என்ற 3 நிமிட படத்துக்கு வசனங்களுடன் கதையை எழுதுதல், பள்ளியைச் சுற்றி மரங்கள், அவற்றின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 2 நிமிட திரைப்படத்தை உருவாக்குதல், உங்களுக்கு பிடிக்கும் ஒரு நபரைப் போல நடித்தல் (நடிப்பு) ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளின் வெற்றியாளர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.