15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: டென்மார்க்கில் புதுசட்டம் அமல்
கோபன்ஹேகன்: குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில், ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தது.
இதேபோல், கிரீஸ் நாடும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. இந்தச் சூழலில், சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த வரிசையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சமூக ஊடகங்களும், செல்போன்களும் நம்முடைய குழந்தைகளின் குழந்தைப்பருவத்தைத் திருடுகின்றன. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய சட்டத்தின்படி, 13 வயது முதல் பெற்றோரின் அனுமதியுடன் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற செயலிகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டு முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.