ம.பி.யில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோல்ட்ரிப் மருந்துக்கு தமிழகத்தில் தடை: கம்பெனி உரிமம் ரத்து செய்ய நோட்டீஸ்
சென்னை: மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோல்ட்ரிப் மருந்து விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பெனியின் உரிமத்தை ரத்து செய்ய விளக்கம் கேட்டு தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ம.பி. சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 6 குழந்தைகள் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தன.
காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரையின்படி, மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர், குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து ம.பி. சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் குருபாரதி தலைமையிலான குழுவினர், மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். கோல்ட்ரிப் மருந்துக்கு தமிழகத்தில் தடை விதித்தனர். மேலும் சம்பந்தப்படட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.