காலியாக உள்ள குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு : குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க்-ல் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்ட ஒருங்கிணைப்பாளர்(1 இடம்), மேற்பார்வையாளர் (8 இடங்கள்), ஆற்றுப்படுத்துநர் (1 இடம்), வழக்குப் பணியாளர் (10 இடங்கள்) நிரப்பட உள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனி தனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். காலிப்பணியிடங்களை அதிகரிப்பதோ, குறைப்பதோ இத்துறையின் முடிவிற்கு உட்பட்டது. இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்காணும் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர், பணியில் சேரும் நாளன்று காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் புகைப்படம் மற்றும் சுயக் கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மாலை 5.45 மணிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ கிடைக்குமாறு சமர்ப்பிக்கலாம்.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக்கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை - தெற்கு, எண்:1, புதுத்தெரு, மாநகராட்சி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை - 600016 அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் ஆகியன பரிசீலிக்கப்படாது தகுதி மற்றும் அனுபவத்தில் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.