குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள் ரஷ்ய அதிபர் புடினுக்கு டிரம்ப் மனைவி மெலனியா கடிதம்
வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவின் அலாஸ்காவில் அதிபர் டிரம்புக்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த 15ம் தேதி நடந்தது. இதில் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. இந்த சந்திப்பின் போது டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்ப் எழுதிய கடிதத்தை அதிபர் புடினிடம் வழங்கி உள்ளார். அந்த கடிதத்தில் மெலனியா, உக்ரைன் பெயரை குறிப்பிடாமல், ‘‘புவியியல், அரசியல், சிந்தாத்தத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அப்பாவி குழந்தைகள்.
அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை மீட்டெடுக்க வேண்டும். அப்பாவியான குழந்தைகளை பாதுகாப்பதன் மூலம் நீங்கள் ரஷ்யாவுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே சேவை செய்பவர் ஆவீர்கள். இதை உங்களால் மிக எளிதாக செய்து விட முடியும். குழந்தைகளுக்காக ஒப்பந்தம் செய்வதற்கு உங்கள் பேனாவை சுழற்றுவதை பரிசீலியுங்கள்’’ என கூறி உள்ளார்.