குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி
கூடலூர் : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பிஐஇடி கட்டிடத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாடு 2026க்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் ஆய்வு கட்டுரைகள் தயாரிப்பதற்கு உறுதுணை புரிவதற்காக பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பயிற்சியாளர்களாக கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசியர் அர்ஜீணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் மணிவாசகம், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட சமம் பொறுப்பாளர் கவிதா ஆகியோர் செயல்பட்டனர். நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற மையக்கருத்தின் அடிப்படையில் இந்தாண்டு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் உப தலைப்புகளாக நீர் சூழலும், பாதுகாப்பும் நீர் சார்ந்த பொது சுகாதாரமும், மருத்துவமும், நீர் சார்ந்த நோய்கள், நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்பான பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுக்திகள் என மேற்கண்ட ஐந்து உப தலைப்புகளில் விருப்பப்படும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டு குழுவாக ஆய்வை மேற்கொள்ளலாம். ஒரு குழுவில் வழி காட்டுனர் ஒருவரும், இரண்டு மாணவர்களும் இருக்க வேண்டும்.
31.12.2023 தேதியின் படி 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இளநிலை பிரிவிலும், 14 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முதுநிலை பிரிவிலும் பங்கேற்கலாம். மாணவர்கள் நேரடியாகவோ அல்லது பள்ளிகளின் மூலமாகவும் பங்கேற்கலாம். பங்கேற்புக்கு கட்டணம் இல்லை.
இச்செயல்பாடு குழந்தைகளின் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். ஆகவே அவர்களின் பங்கேற்பையும், சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டுமென தழிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றியுரை கூறினார்.