குழந்தை திருமணம் மனித குலத்துக்கு எதிரான குற்றம்: ஒன்றிய அமைச்சர் அன்ன பூர்ணா தேவி வேதனை
புதுடெல்லி: குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவுக்கான 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழாவில் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அன்ன பூர்ணா தேவி, “குழந்தை திருமணம் என்பது சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, இது ஒரு மகளின் குழந்தை பருவத்தை பறித்து, ஆரம்பகால மகப்பேறு மற்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு துன்பங்களை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற ஒன்றிய அரசின் முயற்சி மூலம் தற்போது பெண்கள் முன்பை விட வேகமாக முன்னேறி வருகின்றனர். விளையாட்டு, பாதுகாப்பு, சுரங்கத்துறை, விண்வௌித்துறை போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் புதிய வரலாற்றை உருவாக்கி வருகின்றனர். குழந்தை திருமணம் என்பது மனித குலத்துக்கு எதிரான பெரும் குற்றம். குழந்தை திருமணங்களை தடுப்பதில் பூஜ்ய சகிப்பு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும. இதற்கு மாநிலங்கள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் பிற தலைவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒரு குழந்தை திருமணத்தை கூட ஏற்க முடியாது” என்றார்.