உல்லாசத்துக்கு இடையூறு: குழந்தையை கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது
திருமலை: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்று புதைத்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33). இவரது மனைவி மம்தா (26). இவர்களது மகன் சரண் (4), மகள் தனு(3). இந்நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மம்தா தனது குழந்தைகளுடன் சப்ஷாபள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கினார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மம்தா, தனது மகனை பெற்றோரிடம் விட்டுவிட்டு மகள் தனுயை அழைத்துக்கொண்டு, கள்ளக்காதலன் பயாசுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.இதையறிந்த பாஸ்கர், கடந்த மாதம் 27ம்தேதி சிவம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அங்கு சென்று இருவரையும் கண்டுபிடித்தனர். ஆனால் குழந்தை தனுயை காணவில்லை.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தனுயை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று, குழி தோண்டி புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை புதைத்த இடத்தை மம்தா காண்பித்தார். சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மம்தா மற்றும் பயாஸ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.