எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் ‘அப்பா’ என்னை திருமணம் செய்து மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்: பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
சென்னை: என்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சுருதி என்பவருடன் திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே சினிமாவில் நடிக்கும் போது பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதுதொடர்பாக ஜாய் கிரிசில்டாவும் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படங்கள் பதிவு செய்து, அதன் கீழ் மிஸ்டர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மிஸ்சஸ் ஜாய் கிரிசில்டா எனவும் பதிவு செய்தார். இது சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிங்கப்பூரில் சொகுசு கப்பல் ஒன்றில் இருவரும் தேனிலவு சென்றது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது மனைவி சுருதியுடன் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்களும் பரவியது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பாஷ்யம் புளூட்டஸ் குடியிருப்பை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் திரு. மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் என் மகன் ஜெய்டன் மற்றும் பார்வையற்ற தாயாருடன் வசிக்கிறேன். நான் 2011 முதல் ஒரு புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறேன். 2018ம் ஆண்டு ஜே.ஜே. பிரெடிக் என்பவரை மணந்தேன், 2020ம் ஆண்டு எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நாங்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தோம். அந்த நேரத்தில் கடந்த ஜூலை 2023ல், சில நண்பர்கள் மூலம், மாதம்பட்டி ரங்கராஜை நான் சந்தித்தேன். 1.8.2023 முதல் 30.8.2023 வரை பல சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்தோம்.
அந்த சந்திப்புகளின் போது, மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி சுருதியிடமிருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றதாகவும், என்னை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணையாக என்னை அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு நான், எனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவரிடம் விளக்கினேன். பிறகு அவர், என்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், நான் உடனடியாக எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கூறினார், அப்போதுதான் நாம் ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியும் என்றும் கூறினார்.
அதன் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் சென்னைக்கு அடிக்கடி வரத் தொடங்கினார், பல்வேறு ஓட்டல்களில் என்னுடன் நேரத்தை அவர் செலவிட்டார். பின்னர் நான் எனது கணவரிடம் ஆகஸ்ட் 2023ல் சென்னை நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தேன். அதனை தொடர்ந்து கடந்த 2023 டிசம்பர் 24ம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், நாங்கள் இருவரும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை பல விழாக்கள், ஓட்டல்கள் மற்றும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வார், அங்கு அவர் என்னை அனைவருக்கும் எனது மனைவி என அறிமுகப்படுத்துவார்.
கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், அவர் என்னை முதல் முறையாக அவரது சொந்த ஊரான கோவைக்கு அழைத்துச் சென்றார், அவரது பெற்றோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், எனது மகனை ஒரு பள்ளியில் சேர்த்து தந்தை என்றும் கையெழுத்திட்டார். அதன் பிறகு செப்டம்பர் 2024ல், நான் கர்ப்பமானேன், மாதம்பட்டி ரங்கராஜ் என்னை மிரட்டி கருக்கலைப்பு செய்தார். பின்னர் மீண்டும் டிசம்பர் 2024ல், நான் கர்ப்பமானேன். மறுபடியும் அவர் குழந்தையை கருக்கலைப்பு செய்ய என்னை கட்டாயப்படுத்தி கலைத்தார். பிறகு மீண்டும் கடந்த ஏப்ரல் 2025ல், மீண்டும் கர்ப்பமானேன்.
இந்த முறையும் அவர் என்னை கருக்கலைப்பு செய்யச் சொன்னார், அதை நான் மறுத்துவிட்ேடன். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் என்னை அடித்தார். அதனால் எனது இடது காது பாதிக்கப்பட்டு எனக்கு பார்வை பிரச்னைகள் ஏற்பட்டன.
நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்த ஐ-போன் மற்றும் ஐ-பேடை உடைத்தார். அப்போது குழந்தை உனக்கு வேண்டுமா அல்லது நான் உனக்கு வேண்டுமா என்று கேட்டு என்னை மிரட்டத் தொடங்கினார். பிறகு அவரது நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் அருண் பாபு போன்றவர்கள் மூலம் என் மகனின் வாழ்க்கையை முடித்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனர்.
அந்த நேரத்தில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர், தனது முதல் மனைவி சுருதியை உண்மையில் விவாகரத்து செய்யவில்லை என்ற தகவல் தெரியவந்தது. என்னை திட்டமிட்டு எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்து திருமணம் செய்து குழந்தை கொடுத்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ’மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா’ எனக்கு அவர் தான் கணவர். இதில் எந்த சமரசமும் செய்யமாட்டேன்.
நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளது. அதை நான் வெளியிட விரும்பவில்லை. எனவே, என்னை திட்டமிட்டு திருமணம் செய்து ஏமாற்றி குழந்தை கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.