சிக்குன்குனியா பிடியில் சிக்கி தவிக்கும் சீனா: 7,000 பேருக்கு நோய் பாதிப்பு
தைபே: சிக்குன்குனியா என்பது ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோய். டெங்குவை போலவே சிக்குன்குனியாவும் கடும் காய்ச்சல், மூட்டுவலி, உடல் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள், முதியவர்கள், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை சிக்குன்குனியா எளிதாக பாதிக்கிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக சிக்குன்குனியா வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள போஷன் உள்ளிட்ட 12 நகரங்களில் நோய்த்தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 7,000 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்டதுபோல, சிக்குன்குனியா பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்த பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கிருமி நாசினிகளை தௌித்து கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட லேசான பாதிப்புகள் இருந்தாலே மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “ குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.