திமுக மூத்த உறுப்பினரின் ஆசையை ஒரே நாளில் நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: புகைப்படம் எடுத்து கலைஞர் சிலை பரிசு வழங்கினார்
சென்னை: தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற திமுக மூத்த உறுப்பினரின் ஆசையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் நிறைவேற்றினார். மூத்த உறுப்பினருடன் புகைப்படம் எடுத்து கலைஞர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் திமுக செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலி மேற்கு மாவட்டம் ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், தனது தந்தையான திமுக மூத்த உறுப்பினர், முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்படுவதாக தெரிவித்தார். அவர் தெரிவித்த மறுநிமிடமே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சிவகுமாரின் தந்தையை தொடர்பு கொண்டு அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அத்துடன், “தாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தீர்களாம்”, அறிவாலயத்திற்கு வரமுடியுமா, வந்தால் தங்கள் விருப்பப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தம் தந்தையிடம் பரிவுடன் பேசியதைக் கேட்டவுடன் சிவகுமார் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகுமாரிடம் நாளையே, தங்கள் தந்தையை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து நேற்று முத்துவேல் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார்.
அங்கு அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் முதல்வர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்துவேலுக்கு கலைஞரின் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதனை முத்துவேல் ஆனந்த சிரிப்புடன் பெற்றுக்கொண்டார். தன்னுடைய நீண்ட நாள் ஆசையை ஒரே நாளில் நிறைவேற்றியதற்காக புன்முறுவலுடன் முதல்வருக்கு அவர் நன்றி ெதரிவித்தார். அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
* முதல்வரிடம் நெகிழ்ச்சியான பேச்சு
திமுக மூத்த உறுப்பினர் முத்துவேலை நேரில் அழைத்துப் பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுச்சின்னம் வழங்கினார். அப்போது முத்துவேல்,தனது வாரிசுகளுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருப்பதைச் சொல்லி பெருமிதம் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்த போது அதிகாலை 1.15 மணிக்கு தங்கள் கிராமத்திற்கு வந்து கொடியேற்றியதை நினைவுபடுத்தினார் முத்துவேல். 300 வீடுகள் உள்ள தங்கள் கிராமத்திற்கு மட்டும் 2 முறை வந்துள்ளீர்கள் என முதல்வர் செல்லாத கிராமமே இல்லை என்று அவர் கூறினார்.