உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்து, 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மேற்கொள்ளப்பட்டு உதவிப்பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும்உதவி இயக்குநர்(உடற்கல்வி) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 213 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 59 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து, தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக (Centre of Excellence) மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 190 உதவிப்பேராசிரியர்கள், 12 உதவி நூலகர்கள்மற்றும்11 உதவி இயக்குநர்(உடற்கல்வி) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப் படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் “புதுமைப்பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலத் “தமிழ்ப் புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூபாய் 1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
* திறந்து வைக்கப்பட்ட உயர்கல்வித் துறை கட்டடங்களின் விவரங்கள்
உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் கடலூர் மாவட்டம், வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 13 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 13 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 15 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைத் தொகுதிக் கட்டடம் என மொத்தம் 59 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உயர்கல்வித் துறை சார்ந்த கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக (Centre of Excellence) மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் உலகத் தரமான தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக (Centre of Excellence) 2,590.303 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்கு Tata Technologies Limited நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி ஆணையரகத்திற்கும் இடையே முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, தொழிற்துறையுடன் இணைந்து கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல், புதிய தொழிற்சார் பாடத்திட்டங்களை உருவாக்குதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல், மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொழிற்துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திறன்மிக்க மனித வளங்களை உருவாக்க உதவுவதோடு, தொழிற்துறை மற்றும் கல்வித் துறைக்கிடையேயான இடைவெளியைக் குறைத்து, தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி பெற்ற, உயர்திறன்மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக மாணவர்கள் உருவாக்கப்படுவர்.
* உதவிப்பேராசிரியர்கள், உதவி நூலகர்கள்மற்றும்உதவி இயக்குநர்(உடற்கல்வி) பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்குதல்
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 190 உதவிப்பேராசிரியர்கள், 12 உதவி நூலகர்கள்மற்றும்11 உதவி இயக்குநர்(உடற்கல்வி) பணியிடங்களுக்கு ஆசிரியர்தேர்வு வாரியம்மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் பொ. சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் வெ. குமரேசன், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஷைலேஷ் சரப், உலகளாவிய தலைவர் (அரசாங்க திட்டங்கள் மற்றும் திறன்கள்) சுஷில் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்