முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக. 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்: தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் அல்லது மே தொடக்கத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின’ ஆகிய இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த முகாமில், இதுவரை மாதம் ரூ.1000 பெறாமல் இருக்கும் மகளிர்கள் ஆர்வமுடன் மனு அளித்து வருகிறார்கள். இந்த மனுக்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர, தேர்தலுக்கு முன் இன்னும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 14ம் தேதி (வியாழன்) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 14ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழக அரசின் அடுத்த கட்ட திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.