முதல்வர் இன்று திருச்சி பயணம்: நாளை புதுகையில் 44 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
புதுக்கோட்டை: திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று (9ம் தேதி) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். நாளை (10ம்தேதி) காலை 8.45 மணிக்கு வயலூரில் நடைபெறும் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் கார் மூலம் புதுக்கோட்டை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.223.06 கோடி மதிப்பில் 577 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.348.43 கோடியில் 44,093 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழா முடிந்த பின் மீண்டும் காரில் திருச்சி வந்து பொன்மலையில் பாவை குழுமங்களின் அன்புச்சோலை என்ற முதியோர் இல்லத்தை மதியம் 1 மணி அளவில் திறந்து வைக்கிறார். அதன்பிறகு திருச்சி சுற்றுலா மாளிகைக்கு வரும் முதல்வர் மதிய உணவுக்கு பிறகு விமான நிலையம் சென்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.