முதல்வர் தேசிய கொடி ஏற்றும்போது ஜார்ஜ் கோட்டையில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் விடுத்த ஆசாமி கைது
சென்னை: முதல்வர் கொடி ஏற்றும் போது புனித ஜார்ஜ் கோட்டையில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் செங்கல்பட்டில் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அதை நானே நேரில் வந்து நிகழ்த்துவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சுதந்திர தின விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் முதல்வர் இல்லம் அருகே தீவிர சோதனை நடத்தப்பட்டது. பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மயூரை சேர்ந்த கணேஷ் என்றும், இவர் ரியல் எஸ்ேடட் தொழில் செய்து வந்ததும், தற்போது தொழில் இழப்பு காரணமாக மது போதைக்கு அடிமையாகி முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக இரவோடு இரவாக கணேஷை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.