முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் பயணம்: இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் சிறப்புரை
சேலம்: சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு 26வது மாநில மாநாடு’ நடந்து வருகிறது. இன்று மாலை ‘வெல்க ஜனநாயகம்’ எழுச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு கலையரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 26வது மாநில மாநாடு நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளை மறுநாள் வரை நடக்கிறது. இன்று 2வது நாளாக மாநாடு நடந்து வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு ‘வெல்க ஜனநாயகம்’ எழுச்சி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். முன்னதாக அவர் சென்னையிருந்து இருந்து மாலை 4.40 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 5.35 மணிக்கு வருகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் கார் மூலம் நேரு கலையரங்கிற்கு மாலை 6 மணிக்கு வருகிறார். மாநாட்டில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ெகாடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தவாக தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.முதல்வர் சேலத்தில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு தர்மபுரி செல்கிறார்.
தர்மபுரியில் ரோடு ஷோ;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் ஊராட்சி பிஎம்பி கல்லூரி அருகில் நாளை (ஞாயிறு) நடைபெறும் அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். ரூ.512.52 கோடி மதிப்பீட்டிலான 1044 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடி மதிப்பீட்டிலான 1073 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16ம் தேதி) மாலை 7 மணிக்கு சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி வருகிறார். மேலும், அதியமான்கோட்டை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார். நாளை காலை (ஞாயிறு) 8.50 மணிக்கு ஒட்டப்பட்டியில் முரசொலி மாறன் 92வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தடங்கம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா மற்றும் அதியமான்கோட்டையில் கூட்டுறவு சங்க விழாவில் பங்கேற்கிறார்.