முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி
சென்னை: 50 ஆண்டுகள் திரை பயணத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் 171ஆவது திரைப்படமான கூலி நேற்று(ஆகஸ்ட் 14) வெளியாகி, உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானது. இதனால் ரஜினி இரட்டை கொண்டாட்டத்தில் உள்ளார்.
இந்தசூழலில் ரஜினிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். இவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 15) நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். “அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா , தினகரன், பிரேமலதா மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.