முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பான ஏற்பாடு ‘அன்னம்தரும் அமுதக்கரங்கள்’ 200வது நிகழ்ச்சி
பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், ‘‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற நிகழ்ச்சி மூலம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை கொளத்தூர் சீனிவாசன் நகரில், ‘‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ 200வது நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். கலாநிதி வீராசாமி எம்பி, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர்கள் சரிதா, கூ.பி. ஜெயின், ஸ்ரீராமலு, பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சந்துரு, சம்பத்குமார் கலந்து கொண்டனர்.நிருபர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:
அன்னம்தரும் அமுகக் கரங்கள் 200வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினோம். அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வந்து உணவு வாங்கி செல்கிறார்கள். போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஏற்றமிகு கருத்தை எடுத்து சொல்வோம்.வரும் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும். தெற்கில் 27 தொகுதிகளை அதிமுக வைத்துள்ளார்கள். இந்த முறை 7 தொகுதிகளில்தான் வெற்றி பெறுவார்கள். இந்த முறை தெற்கில் 33 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்.பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களால் திமுக உருவாக்கப்பட்டது. விஜய் எல்லாம் தனியாக நிற்கிறார். ஆனால் இன்று பெரியாரை சொல்கிறார், அவர் வந்து ஏதுவும் பண்ண முடியாது.எம்ஜிஆர் 30 ஆண்டுகள் திமுகவில் இருந்தவர். அதனால் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றார்.
விஜயகாந்த் 25 லட்சம் 15 லட்சம் நபர்களை கொண்டு மாநாடு நடத்தியவர். அதனால் மாநாடு நடத்துவது பெரிய காரியம் கிடையாது. ஓட்டுப்போட தெரியாதவர்கள் 10, 12, 13 என சினிமா பார்க்கக் கூடிய வயசில் மாநாடுக்கு வருவார்கள். அதனால் அதை கண்டுகொள்ளக்கூடாது. எங்களை பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.தமிழ்நாடு உரிமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார். முதலமைச்சர் யாருக்கும் அடிபணிந்தவர் கிடையாது. மக்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சரியாக இருக்கவேண்டும் என்பது தான் அவரின் முதல் கடமை.
33 சதவீதம் ஒரு நாட்டில் காடு இருக்கவேண்டும். தமிழத்தில் 26 சதவீதம்தான் உள்ளது. நமது ஆட்சி காலத்தில் மீதம் உள்ள சதவீதத்தை எட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புலி, யானைகள் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பு வழி அமைத்துள்ளோம். புகார் வரும் இடங்களில் சிறுத்தைகளை பிடித்து வருகிறோம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். அதிமுக ஒரு கட்சியே கிடையாது. அங்குள்ள தொண்டர்கள் எல்லாம் திமுகவுக்கு வந்துவிட்டார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.