முதல்வர், அமைச்சர்கள் சினிமாவில் நடிக்க தடை இல்லை: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
திருமலை: ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்த ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிக்கெட் விலையை மாநில அரசு உயர்த்தி விற்பனை செய்ய அனுமதித்தது. இந்நிலையில், மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், துணை முதல்வராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான விஜய் குமார் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி வெங்கட ஜோதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் முதல்வர், அமைச்சர்கள் படங்களில் நடிக்க எந்த தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதேபோல் முன்னாள் முதல்வரும், திரைப்பட நடிகருமான என்டிஆர் வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கியதை நினைவுகூறப்பட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.